Thursday, October 7, 2010

புகழேந்தி முன்னுரை...




காதலோடு விளையாடி என்ற என் கவிதை தொகுப்பிலிருந்து நண்பர் குகை மா.புகழேந்தியின் முன்னுரை...



திசைகளைப்போல விரிந்து நீளும் இந்த ஞாபகங்களின் முடிவுறாத தெருக்களில் எங்கு நுழைந்து எங்கே வெளியேறப்போகிறேனோ தெரியவில்லை. கடந்த இருபது வருட வாழ்க்கையை முழுவதுமாக இழுத்து ஒரு நூலைப்போல விரல்களில் சுற்றி முடித்து சிலிர்த்த அனுபவத்தில் தெளிவுறத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்.

நட்பைவிட உயர்வாய்ச் சொல்ல இங்கே எதுவுமேயில்லை. அப்படிப்பட்ட உயிரான நட்பாய் காலம் வடிகட்டிக் கொடுத்த மீத நண்பன் மதிராஜ் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி. அவன் கணினிப்பெட்டிக்குப் பழகும் முன்பே எனக்குப் பழக்க மானவன். அவனது விரல்கள் தட்டச்சுப் பழகும் முன்பே  எழுதத் துவங்கிய எழுத்துக்களின் நண்பன் நான். அதன் அர்த்தங்களின் ரசிகன் நான். நாங்கள் நண்பர்களாவதற்குக் காரணமாக இருந்தவை எங்களின் எழுத்துக்களாகிய கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நெடுங்கதைகள்...

நிராதரவற்று ஒதுங்கிய குடிசைக்குள் தத்தமது பின்புல உளைச்சல்களோடும், அலைச்சல்களோடும் துவங்கிய வாழ்வின் தனிமையிலிருந்து கண்டெடுத்த வலிமிகுந்த எழுத்துக்களோடு வலிமையான நண்பர்களாக அறிமுகமான வர்களில் மிக முக்கியமானவன் மதி என்பேன்.

ஆரம்பத்திலிருந்தே மிகவும் எதிர்கொள்ளல் - துணிச்சல் மிகுந்தவன் அவன். அவனது வார்த்தைகளில் எப்போதும் ஒரு கல் தானாகவே தன் சிலையை அவிழ்ந்துகொள்ளும், பெரும் நம்பிக்கை தெறித்துச் சிதறும். அது எதிரே அமர்ந்திருக்கும் என்போன்ற நண்பர்களைச் சிலைகளாக மாற்றும். அப்படிச் சிலையானவன் என்கிற முறையில் இன்றுவரைக்கும் மதிராஜ் சொல்வதைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன் என்பதன் மூலமாக நான் மிகுந்த நட்போடு நெகிழ்கிறேன்.

இதற்கும் முன்பே பலநூறு நல்ல கவிதைகள் எழுதி, சில பத்து நல்ல சிறுகதைகள் புனைந்து, அரிதான மிகச்சில நாவல்கள் எனும் நெடுங்கதைகள் படைத்து பரவலாக எழுத்தாளனாக, கவிஞனாக அறியப்பட்ட அருமை நண்பன் மதிராஜ் தன் ஆதிவேர் பட்டுப் போய்விடாமல் தன்னை இன்னும் இன்னும் அப்படியே அச்சு அசலாய்ப் பாதுகாத்து வைத்திருக்கிறான் என்பதற்கான அடையாளமாகத்தான் இத்தனை நெருக்கடியான, இறுக்கமான பல சூழல்களை வாழ்ந்து கடந்தும் தன்னை அப்படியே மீண்டும் மீட்டெடுத்திருக்கிறான்.

அவன் மீண்டும் தன் விரல்களை மையிட்டு நிரப்பி எழுதுகோலாய் மாற்றியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. அவ்வகையில் மதிராஜ் இதற்குமுன் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்புகளான `அப்படிப் பார்க்காதே', `குட்டி இளவரசி' போன்ற படைப்புகளிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு தன் இத்தனைக்கால எழுத்து வீரியத்தின் இடைவெளிப் பாய்ச்சலை இந்தக் `காதலோடு விளையாடி' என்கிற தொகுப்பினூடே நிகழ்த்தியிருக்கிறான் என்கிற மாபெரும் அழகு இரகசியத்தை நான் மட்டுமே கண்டுபிடிக்கவும் கண்டுகளிக்கவும் இயலும் என்று உணர்கிறேன்.

இவ்வுலகில் காதல் கவிதைகள் எழுதத் திறம்பட தேர்ந்தெடுக் கப்பட உகந்தவர்களாக உள்ளவர்களில் மிக முக்கியமானவனாக மதியைச் சொல்வேன். 

காதல் எல்லோருக்குமானது. அது வராதவர்களோ அல்லது அதை வந்தடையாதவர்களோ இந்த பூமியில் கிடையாது எனலாம். ஆனால் காதல் வந்த எந்தவோர் ஆணாலும் கவிதை எழுதிட இயலுமா என்றால் இல்லை என்பதே இங்கு ஆமாமாக இருக்கிறது. ஆனால் மதி இத்தனை வருடங்கள் கழித்து மிக            அழகான, அறியப்படாத காதலின் உணர்வுகளை எழுதியிருக் கிறான் என்பதை இத்தொகுப்பின் கவிதைகள் வழி உணரமுடிகிறது.

மதிராஜ் இன்றைய சூழலில் மிகச்சிறந்த புத்தக வடிவமைப்பாளன். அவனது விரல்கள் வடித்த அத்தனை வடிவமைப்பு களுமே மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக்கூடிய தகுதியுடையவை. அதனாலேயே மிக உயரத்தில் புகழ் பெற்றிருப்பவர்கள் பலரும் அவனைத் தேடி தமது அடுத்தடுத்த படைப்புகளை உருப்படுத்த நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்... கொண்டேயிருக்கிறார்கள்...

அதன் தொடர்ச்சியாக கவிஞர்களின் கூடாரமாக, எழுத்தாளர் களின் புகலிடமாக, ஓவியர்களின் உறைவிடமாக அவனது இருப்பிடம் எவ்விடமாக இருந்தாலும் சிறப்பு வாய்ந்த இடமாக மாறிக்கொண்டே இருக்கிறது. கணினிப்பெட்டியின் செவ்வகப் பரப்பில் மதியின் விரல்கள் எல்லா சிகரத்தையும் எட்டி விட்டனவோ என்ற உயர்வு நவிற்சி உள்ளத்துள் பொழிகிறது பெருமழையாய்...

தன் ஓவிய விரல்கள், கவிதை விரல்கள், கணினி விரல்கள், புகைப்பட விரல்கள் இவற்றின் இடையே யாரையும், எப்போதும் சலிக்காமல் வரவேற்கும் நட்பு விரல்கள் என வியப்பூட்டுகிற கலைஞனாக தொடரும் திறம்மிக்க... அவனின் மீண்டெழுதலின்... எழுதுதலின் வாயிலாக நமக்கு கைவசப்பட்டிருக்கிற இந்தக் காதல் கவிதை நூலாகிய `காதலோடு விளையாடி' அருமையான நூலென்பேன்.

எப்போதும் அழகைத்தேடுதல், அழகுபடுத்துதல் என அழகுணர்ச்சியோடே வாழ்வதாலோ என்னவோ அவனது மனசும் அழகாகிக்கொண்டே போகிறது. அதனால்தான் இந்த நூலின் பக்கங்களில் வாழ்கிற ஒவ்வொரு கவிதையிலும் மதி காதலால் விளையாடி இருக்கிறான். அவன் மட்டுமல்லாமல் நம்மையும் காதலோடு விளையாடத் தூண்டுகிறான்.

இக்கவிதைகளை படைத்ததன் மூலம் மதியைப் படைத்தவர்கள் எவ்வளவு பெருமையுறுவார்களோ அவ்வளவு பெருமையுறுகிறேன். அதே பெருமை யோடு அவனை மனதார காதலோடும் கர்வத்தோடும் வாழ்த்துகிறேன்.

மதிக்கு ஆயிரம் ஆயிரம் நண்பர்கள். எனக்கு ஆயிரம் ஆயிரம் நண்பர்களாய் ஒரே ஒரு மதி.

பிரியமுடன்
குகை மா.புகழேந்தி

No comments:

Post a Comment