Sunday, December 18, 2011

ரகசியமில்லாத சிநேகிதிஓவியம் வரைபவர்; இப்போது புதிதாக ஏற்பட்டுள்ள `வடிவமைப்பு' எனும் அழகுக்கு அழகு செய்பவர்; கவிஞராகவும் இயற்கையிலேயே இருந்துவிட்டால் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து ஏற்படக் கேட்க வேண்டுமா?
திரு. ஆர்.சி.மதிராஜ் என்ற இளங்கலைஞர் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். பதிப்பாளர் - எழுத்தாளர் நிவேதிதா சுவாமிநாதன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
எழுத்துச் சித்தர் லா.ச.ராமாமிருதம் அவர்களின் ஜனனிக்கு மேலட்டை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டேன். 1952-ல் வெளிவந்தது போன்ற அதே மேலட்டையைத்தான் வெளியிட்டிருக்க வேண்டும்.
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கும் கொள்கையுடைய நான் ஆர்.சி.மதிராஜை அணுகினேன். மேலட்டை, அழைப்பிதழ் என்று அழகாக செய்து கொடுத்துப் பெருமைப்படுத்திவிட்டார்.
அவரும் அவர் மனைவியும் எழுதிய சில புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தார். அவற்றுள்...
`சிநேகிதி' என்று பல வண்ண எழுத்துகளில், புதிய அளவில் பரிசு வழங்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட நூலும் ஒன்று. அந்த நூலைப் படித்தேன், அண்மையில் படித்த நூல் பகுதிக்கு அந்தக் கவிதை நூலைப் பயன்படுத்த விரும்பினேன்.
வார்த்தை ஜாலத்துடன், கவிதை நயத்துடன் புதிய தத்துவத்தை நாம் சிந்திக்க வைக்கும் சிறந்த தயாரிப்பு.
திரைப்படத் தலைப்பின்கீழ் ஓர் சிறு வரி சேர்க்கப்பட்டிருக்கும் - திருவிளையாடல் என்ற தலைப்பில் திரைப்படம் என்று நினைப்போம்... `ஆரம்பம்' என்று சிறு எழுத்து ஒட்டப்பட்டிருக்கும்.
இந்த தத்துவக் கவிதை நூலின் பெயர் `ரகசியமில்லாத சிநேகிதி'. சிநேகிதியுடன் - ரகசியமில்லாத என்ற சொல்லைச் சேர்த்தது ஏன் என்று அவரைக் கேட்பதற்கு முன்பு...
ஆண்-பெண் நட்பு என்றதும் அனைவர் முன்பும் வைக்கப்படும் முதல் கேள்வி, ஓர் ஆணும் பெண்ணும் எந்தவிதமான ஈர்ப்பும் இல்லாமல் கடைசிவரை நண்பர்களாகவே இருக்க முடியுமா என்பதுதான்.
நண்பர் - சிநேகிதர் - ஃபிரண்ட் என்பவை ஒரே பொருள் தரும் சொற்கள்தாமே?
`முடியும்' என்று ஒரே அழுத் தமான சொல்லால் புதிய  தத்துவத்தைத் தொடங்குகிறார் ஓவியப்பாவலர் மதிராஜ்.
முடியும்- என்பதற்கு அடுத்த பக்கத்திலேயே விடை கூறுகிறார்.
இயற்கை எல்லாவற்றையும் இரண்டிரண்டாகப் படைத்திருப்பது காதலுக்கும், காமத்துக்கும் மட்டுமன்று; நட்புக்காகவும்தான்.
காதல் என்பதற்குப் பொருள் என்ன? சிநேகிதன் - சிநேகிதி என்பதற்கு என்ன அர்த்தம் என்று அகராதியைத் தேடினேன். ஒரே மாதிரியான `ஈ அடிச்சான்' காபி!
ஓர் ஆண் ஆணுடன் சிநேகமாக இருப்பதுபோல், ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் சிநேகிதியாக இருப்பதுபோல்... ஓர் ஆண் ஒரு பெண்ணுடனோ, ஒரு பெண் ஓர் ஆணுடனோ சிநேகமாக - நண்பனாக - நண்பியாக இருக்க முடியுமா?
பெரிய தத்துவம் இது. தமிழ்நாட்டில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பெண்பாற் கவிஞர் கோதை நாச்சியார் என்று பக்தியுடன் பேசப்படும் ஸ்ரீஆண்டாளை உதாரணமாகக் கொள்ளலாம்.
அடுத்து ஒளவையாரைச் சொல்லலாம். நான் எழுதி, அதிகம் பிரபலமடையாத இராஜேந்திர சோழனின் கடைசி மனைவி வீரமாதேவியைப் படித்தவர்கள் சொல்லலாம்.
புத்தபிரானின் ஜீவகாருண்ய தத்துவத்தைப் போன்ற விவாதத் திற்குரிய ஆராய்ச்சி.
அதற்காகமட்டும் இந்தப் புத்தகத்தை நான் ரசிக்கவில்லை.
ஒரு பருவ யுவதியை - துடிப்புள்ள ஒரு இளைஞன் முதலில் சந்திக்கும்போது - பார்வை எப்படி இருக்கவேண்டும்?
கவிஞர், கவிதை ஒன்றால் முதலில் சந்திக்கும் ஆண் பெண்ணுக்கு தைரியமொன்றைக் கற்றுத் தருகிறார்.
``பெண்களிடம்
கண்கள் பார்த்துப்பேச
நீதான்
கற்றுத்தந்தாய்''
(`கண்கள்' என்பதைக் கவனிக்க வேண்டும். திருவள்ளுவரும், கம்பரும் கற்றுத் தரவில்லையே)
``மனசின் மொழியை
நீ கற்றுத் தந்த பிறகு
உடல் மொழி
என்னை
உறுத்துவதேயில்லை''
ஆகா! இதைவிட நான்கு வரிகளில் நாகரிகத்தை - பண்பாட்டை கற்றுத்தர முடியுமா? `உடல் மொழி' என்ற சொல்லாக்கம் பாராட்டத்தக்கது.
ஒரு மனப்பட்ட கருத்துள்ள இதய ஒலியை இனிவரும் சில கவிதைகளைப் பாருங்கள், படியுங்கள்.
``என் காதலிக்கு நானும்
உன் காதலனுக்கு நீயும்
காதல் சொல்லத்
தேர்ந்தெடுத்தோம்
ஒரே மாதிரியான
இரண்டு வாழ்த்து அட்டைகளை''

``சாப்பிட்டு முடித்ததும்
உன்
கைப்கையிலிருந்து
நான் பணம் எடுத்துக்
கொடுக்கிறேன்''
( இரு சிநேகித - சிநேகிதிகளுக்கும் காதலன், காதலி வேறு இருக் கிறார்கள். நம் சின்னத்திரை எதை வற்புறுத்துகிறது? நீ வேறு ஒருவனைக் காதலிக்கிறாய் - பிரிவோம் என்று )
மற்றொரு அந்நியோன்யக் கவிதையைப் படியுங்கள். (அழகிய படத்துடன் படிக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். யுவன் - யுவதி, முதியோர் யாராயிருந்தாலும் ரூ.70/- செலவு செய்து விஜயா பதிப்பகம், கோயம்புத்தூரிலிருந்து பரிசளிக்க  வாங்கிக் கொடுங்கள் - நீங்களும் ஒரு முறை படித்துவிட்டுத்தான்!)
அந்தப் பூங்காவிற்குள்
அத்தனை மனிதர்கள்
அமர்ந்திருந்தபோதும்
நட்போடு நம்மால்
விளையாடிக்கொண்டிருக்க முடிகிறது
(எங்கே - பாரிஸ் அல்லது ரோம் நகர வீதியிலா.. இல்லை இல்லை)
நீ ஒரு புறாவாகவும்
நான் ஒரு அணிலாகவும்!
நிறையக் கவிதைகள் சுவைக்க இருக்கின்றன. ஒரே ஒரு கவிதையைச் சொல்லிவிட்டு -
அந்த மழைநாளில்
ஆளுக்கொரு குடை பிடித்தபடி
நடந்துகொண்டிருந்தோம்
வீசிய காற்றுக்கு காணாமல்போனது குடை
கேலியாய் சிரித்தபடி
உன் குடையையும் காற்றுக்குக் கொடுத்தபடி
கைகளை நீட்டினாய்
இருவரும் நடக்கத்துவங்கினோம்
நட்பின் குடைக்குள்
இந்தச் சித்திரக் காப்பியத்திற்கு, ஆர்.சி.மதிராஜ் ஒரு சிறப்பான அறிமுக உரை அளித்துள்ளார்.
``கடற்கரையின் அடுத்தடுத்த அலைகளை, கடிகாரத்தின் முட்களை, ஒரு பறவையின் இரண்டு சிறகுகளை, ஒரு நதியை வழிநடத்தும் இரண்டு கரைகளை, ஒரு மரத்தைப் பின்னிக் கிடக்கும் மற்றொரு தாவரத்தை நட்பின் கண்கொண்டு இரசித்தால் நீள நீள நீண்டுகொண்டே போகும் நட்பின் காட்சிகள்.
ஆண் பெண் பாகுபாடற்ற நட்பு ஓர் உயிரியல் அற்புதம். அதை உணர்ந்தவர்களால் மட்டுமே அடையவும் முடியும். காமம் சுமக்கும் உடல்களைத் தூக்கி எறிந்துவிட்டு, நட்பின் சிறகுகளால் ஆணும் பெண்ணும் அழகான வானவில்லை வரைகிற மழையின் சங்கீதமே இந்தக் கவிதைகள்.''
முடிவில் எனக்குச் சிலிர்ப்பு ஏற்பட்டது. 130ஆவது பாரதி பிறந்தநாள் டிசம்பர் 11. பாரதியின் முத்தாய்ப்பான வரிகளுடன்...
இவ்வுலகம் இனியது!
ஆண் நன்று; பெண் இனிது!
உடல் நன்று; புலன்கள் மிகவும் இனியவை!
எல்லா உயிரும் இன்பம் எய்துக!
எல்லா உடலும் நோய் தீர்க!
எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க!


- டிசம்பர் 2011 இதழ்  இலக்கிய பீடத்தில் வந்த விமர்சனம்