Thursday, October 7, 2010
குட்டி இளவரசி
உலகின்
முதல் பெண்
பிறந்த அன்றுதான்
தன்னைத் தானே
சுற்றிக் கொள்ள ஆரம்பித்தது
இந்த பூமி
கிறுக்குப் பிடித்து
---------------------------------------
நீ வீதியில் இறங்கியபோது
சாரலாகத்தான் தொடங்கியது
மழை
குடை விரித்த
கோபத்தில்தான்
கொட்டித் தீர்த்து விட்டது
---------------------------------------
எப்போதும் சாத்தியிருக்கும்
உன் வீட்டு சன்னல்
நினைவூட்டுகிறது
ஓவியம் வரையத் தயாராய்
காத்திருக்கும் கித்தானை
எப்போதாவது
சன்னல் திறந்து நீ
வேடிக்கை பார்க்கையில்
ஓவியமாய் உன்னையே
இட்டு
நிரப்பிக் கொள்கிறது
---------------------------------------
பேருந்தில்
நின்றபடி செல்லும்போது
தொங்கும் கைப்பிடிகளில் ஒன்றை
பிடிமானமாய் பற்ற நேர்கையில்
உனது கையாகவே
உணர்கிறேன்
---------------------------------------
எல்லா நண்பர்களும்
ஏதேதோ எழுதித்தந்த
நினைவேட்டில்
எதுவுமே எழுதாமல்
திரும்பக் கொடுத்துவிட்டாய்
எனக்குத் தெரியும்
வார்த்தைகள் ஏதும் கிடைக்காத
உன் தவிப்பும்
அந்த வெற்றுப் பக்கங்கள்
சுமந்து வந்த
உனது காதலும்
---------------------------------------
உண்மையைச் சொல்
நீ தனிமையில்
கண்ணாடி முன்
நிற்கையில்
தெரிகிறதா இல்லையா
என் முகம்
---------------------------------------
பெரும்பாலான
திருமணங்களின்போது
ஒலிக்கப்படும்
மங்கல இசைகளுக்கிடையில்
மௌன சாட்சியாய்
கேட்கிறது
நசுக்கப்பட்ட காதலின்
விசும்பல் ஒலி
---------------------------------------
நீ
உதடுகளை
ஈரப்படுத்திக்கொள்ளும்
அழகைப் பார்த்து
ரசித்தபோதுதான்
உணர்ந்தேன்
மழையின் ருசியை
---------------------------------------
ஒரு
குட்டி இளவரசி பற்றிய
கதை சொல்லவா என்றேன்
அந்தக் கதையைக் கேட்டு
நீ தினமும்
நச்சரிக்கும்போதெல்லாம்
இளவரசி தூங்குகிறாள்
விளையாடப் போயிருக்கிறாள்
என்று சொல்லியே
ஏமாற்றி வந்தேன்
உன்னை
இன்றோ
விடாப்பிடியாக
அந்தக் கதையைச்
சொல்லியே ஆகவேண்டுமென
அடம் பிடிக்கிறாய்
எப்படிச் சொல்வேன்
அந்த இளவரசி
வளர்ந்து இராணியாகி
எதிரில் நிற்கிறாள்
என் முன் என்பதை
---------------------------------------
நூல் கிடைக்குமிடம்...
விஜயா பதிப்பகம்
20 , ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614
விலை : ரூ.80/-
Labels:
rcmathiraj,
ஆர்.சி.மதிராஜ்,
கவிதை,
கவிதைகள்,
காதல்,
குட்டி இளவரசி,
தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாக உள்ளது
ReplyDeletenice
ReplyDelete