Thursday, October 7, 2010

குட்டி இளவரசி கவிதை புத்தகத்துக்கு அண்ணன் அறிவுமதி எழுதிய முன்னுரை...

















காலம் நீள்கிறது என்றாலும்...
வாழ்வு நீள்கிறது என்றாலும்...
காதல் நீள்கிறது என்றுதான் பொருள்.
உலகம் வாழ்கிறது என்றாலும்
உயிர் வாழ்கிறது என்றாலும்
காதல் வாழ்கிறது என்றுதான் பொருள்.


காதல் நீளும். காதலே நீட்டும்.
காதல் வாழும். காதலே வாழ்விக்கும்.
காதல் வாழ்வும் தமிழ் வாழ்வும்
சந்திக்கும் இடம்
இயற்கை.
இயற்கையே காதலும்.
பாரதிச் சொல்லில்...
காதல் இயற்கை.
மகரந்தச் சேர்க்கைதான் காதல்
சேர்க்கையும்.
பூக்களைச் சுற்றிய வண்டுகளின்
ஒலிச் சிந்தல்கள்தாம்
காதல் கவிதைகள்.
வழுக்குப் பாறைகளில் ஏறி... சறுக்கி
விளையாடிய குழந்தைகளின்
காலம்
சங்க காலம்.
பூங்காக்களின் தகரப் பலகைகளில் ஏறி... சறுக்கி
விளையாடுகிற குழந்தைகளின்
காலம்
தற்காலம்.


காலங்கள் மாறலாம்.
சறுக்கி விளையாடுதல் மாறாது.
காதல் கவிதைகளும்தாம்.
எழுதி மாளாது.
எழுதி எழுதி மாளாது.
புன்செய்க் காடுகளில், கம்மாக் கரைகளில்...
கருவேலங் காடுகளில்
கரட்டு மேடுகளில்... என
எழுதிப் பழகாத கைநாட்டுக் காலத்துத்
தெம்மாங்குகள்தாம்...
ஆண்டாள்களின் பக்திக் காதலாகி...
அய்யாவின் மிரட்டலுக்குப் பயந்து தெளிந்து
படிப்புத் தமிழ் இளைஞர்களின்
காதல் கவிதைகளாய்ப் பெருகிக் கொண்டிருக்கின்றன.


பாலசூர்யா, லலிதா, அண்ணன் அறிவுமதி, புகழேந்தியுடன்...
ஊர்மண் உயிர்ப்புகளை உள்வாங்கிக் கொண்டு
ஊரிலிருந்து புறப்பட்டு வந்த வாழ்வை
நகர நடுவிலும் நசுங்கிவிடாமல் பாதுகாக்கும்
தம்பி மதியின் படைப்பு வளர்ச்சி எனக்குள்
மகிழ்ச்சி செய்கிறது.
 

‘பூங்கா மரத்தடியில்
உதிர்ந்து விழுந்த
இலைகளின் மீது
பதித்துச் செல்லாதீர்கள்
பாதச் சுவடுகளை
சருகுகளினூடே
தேடிக் கொண்டிருக்கலாம்
பழைய காதலொன்று
தொலைந்து போன
தன் பச்சையத்தை’

இயல்பாக... ஆனால்
எம் புன்செய் ஈரத்தின் நெகிழ்வாகக் கிடைத்துள்ள கவிதையிது.
 

‘உதடுகளின் வரிகளை
எண்ணத் துவங்கினேன்’

ஒரு கைதேர்ந்த நிழற்படக்காரனின்
குவி கண்ணாடியால் மிக அருகில் சென்று
உற்றுநோக்குதல் தன்மை
கவிதைக்குள் நிகழ்கிறது.
 

‘பேருந்தில்
நின்றபடி செல்லும்போது
தொங்கும்
கைப்பிடிகளில் ஒன்றைப்
பிடிமானமாய்ப் பற்ற நேர்கையில்
உனது கையாகவே
உணர்கிறேன்’

மிக மிக அழகிய கவிதையிது.
அடிக்கடி அனைவரும் பயன்படுத்துகிற ஒரு பொருளை
கவிதைப் பொருளாக்கிக் காதல் செய்வதில் சுவைஞனை சொடுக்கி இழுப்பது சுலபம்.
இந்தக் கவிதைக்கு அது வாய்த்திருக்கிறது.

‘நீ வீதியில் இறங்கியபோது
சாரலாகத்தான் தொடங்கியது
மழை
குடை விரித்த
கோபத்தில்தான்
கொட்டித் தீர்த்துவிட்டது’


மழைக்கோபம் நியாயமானதுதானே!
மழை... கோபக்காரி.
மழையை மழையாய்
வாங்கத் தெரியாதவர்களிடம்
அவள் முரண்படுவாள். மோதுவாள்.
காதலைக் காதலாய்
வாங்கத் தெரிந்தவர்களுக்குக்
காதல்...
தேவதைக்காரி.
அதனால்தான்
தம்பி மதிக்கு
அவள் உடன்பட்டிருக்கிறாள்.
உயிர் தளும்பும் காதல்கவிதைகளை
ஊற்றி ஊற்றித் தருகிறாள்.
‘மதி’ காதல் கவிதைக்காரர்களில்
இன்றியமையாத இடத்தை
உறுதியாகப் பெறுவார்.


 ............................................................................
 நூல் கிடைக்குமிடம்
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.80/- 

No comments:

Post a Comment