Sunday, December 18, 2011

ரகசியமில்லாத சிநேகிதி



ஓவியம் வரைபவர்; இப்போது புதிதாக ஏற்பட்டுள்ள `வடிவமைப்பு' எனும் அழகுக்கு அழகு செய்பவர்; கவிஞராகவும் இயற்கையிலேயே இருந்துவிட்டால் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து ஏற்படக் கேட்க வேண்டுமா?
திரு. ஆர்.சி.மதிராஜ் என்ற இளங்கலைஞர் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். பதிப்பாளர் - எழுத்தாளர் நிவேதிதா சுவாமிநாதன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
எழுத்துச் சித்தர் லா.ச.ராமாமிருதம் அவர்களின் ஜனனிக்கு மேலட்டை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொண்டேன். 1952-ல் வெளிவந்தது போன்ற அதே மேலட்டையைத்தான் வெளியிட்டிருக்க வேண்டும்.
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கும் கொள்கையுடைய நான் ஆர்.சி.மதிராஜை அணுகினேன். மேலட்டை, அழைப்பிதழ் என்று அழகாக செய்து கொடுத்துப் பெருமைப்படுத்திவிட்டார்.
அவரும் அவர் மனைவியும் எழுதிய சில புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தார். அவற்றுள்...
`சிநேகிதி' என்று பல வண்ண எழுத்துகளில், புதிய அளவில் பரிசு வழங்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட நூலும் ஒன்று. அந்த நூலைப் படித்தேன், அண்மையில் படித்த நூல் பகுதிக்கு அந்தக் கவிதை நூலைப் பயன்படுத்த விரும்பினேன்.
வார்த்தை ஜாலத்துடன், கவிதை நயத்துடன் புதிய தத்துவத்தை நாம் சிந்திக்க வைக்கும் சிறந்த தயாரிப்பு.
திரைப்படத் தலைப்பின்கீழ் ஓர் சிறு வரி சேர்க்கப்பட்டிருக்கும் - திருவிளையாடல் என்ற தலைப்பில் திரைப்படம் என்று நினைப்போம்... `ஆரம்பம்' என்று சிறு எழுத்து ஒட்டப்பட்டிருக்கும்.
இந்த தத்துவக் கவிதை நூலின் பெயர் `ரகசியமில்லாத சிநேகிதி'. சிநேகிதியுடன் - ரகசியமில்லாத என்ற சொல்லைச் சேர்த்தது ஏன் என்று அவரைக் கேட்பதற்கு முன்பு...
ஆண்-பெண் நட்பு என்றதும் அனைவர் முன்பும் வைக்கப்படும் முதல் கேள்வி, ஓர் ஆணும் பெண்ணும் எந்தவிதமான ஈர்ப்பும் இல்லாமல் கடைசிவரை நண்பர்களாகவே இருக்க முடியுமா என்பதுதான்.
நண்பர் - சிநேகிதர் - ஃபிரண்ட் என்பவை ஒரே பொருள் தரும் சொற்கள்தாமே?
`முடியும்' என்று ஒரே அழுத் தமான சொல்லால் புதிய  தத்துவத்தைத் தொடங்குகிறார் ஓவியப்பாவலர் மதிராஜ்.
முடியும்- என்பதற்கு அடுத்த பக்கத்திலேயே விடை கூறுகிறார்.
இயற்கை எல்லாவற்றையும் இரண்டிரண்டாகப் படைத்திருப்பது காதலுக்கும், காமத்துக்கும் மட்டுமன்று; நட்புக்காகவும்தான்.
காதல் என்பதற்குப் பொருள் என்ன? சிநேகிதன் - சிநேகிதி என்பதற்கு என்ன அர்த்தம் என்று அகராதியைத் தேடினேன். ஒரே மாதிரியான `ஈ அடிச்சான்' காபி!
ஓர் ஆண் ஆணுடன் சிநேகமாக இருப்பதுபோல், ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் சிநேகிதியாக இருப்பதுபோல்... ஓர் ஆண் ஒரு பெண்ணுடனோ, ஒரு பெண் ஓர் ஆணுடனோ சிநேகமாக - நண்பனாக - நண்பியாக இருக்க முடியுமா?
பெரிய தத்துவம் இது. தமிழ்நாட்டில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பெண்பாற் கவிஞர் கோதை நாச்சியார் என்று பக்தியுடன் பேசப்படும் ஸ்ரீஆண்டாளை உதாரணமாகக் கொள்ளலாம்.
அடுத்து ஒளவையாரைச் சொல்லலாம். நான் எழுதி, அதிகம் பிரபலமடையாத இராஜேந்திர சோழனின் கடைசி மனைவி வீரமாதேவியைப் படித்தவர்கள் சொல்லலாம்.
புத்தபிரானின் ஜீவகாருண்ய தத்துவத்தைப் போன்ற விவாதத் திற்குரிய ஆராய்ச்சி.
அதற்காகமட்டும் இந்தப் புத்தகத்தை நான் ரசிக்கவில்லை.
ஒரு பருவ யுவதியை - துடிப்புள்ள ஒரு இளைஞன் முதலில் சந்திக்கும்போது - பார்வை எப்படி இருக்கவேண்டும்?
கவிஞர், கவிதை ஒன்றால் முதலில் சந்திக்கும் ஆண் பெண்ணுக்கு தைரியமொன்றைக் கற்றுத் தருகிறார்.
``பெண்களிடம்
கண்கள் பார்த்துப்பேச
நீதான்
கற்றுத்தந்தாய்''
(`கண்கள்' என்பதைக் கவனிக்க வேண்டும். திருவள்ளுவரும், கம்பரும் கற்றுத் தரவில்லையே)
``மனசின் மொழியை
நீ கற்றுத் தந்த பிறகு
உடல் மொழி
என்னை
உறுத்துவதேயில்லை''
ஆகா! இதைவிட நான்கு வரிகளில் நாகரிகத்தை - பண்பாட்டை கற்றுத்தர முடியுமா? `உடல் மொழி' என்ற சொல்லாக்கம் பாராட்டத்தக்கது.
ஒரு மனப்பட்ட கருத்துள்ள இதய ஒலியை இனிவரும் சில கவிதைகளைப் பாருங்கள், படியுங்கள்.
``என் காதலிக்கு நானும்
உன் காதலனுக்கு நீயும்
காதல் சொல்லத்
தேர்ந்தெடுத்தோம்
ஒரே மாதிரியான
இரண்டு வாழ்த்து அட்டைகளை''

``சாப்பிட்டு முடித்ததும்
உன்
கைப்கையிலிருந்து
நான் பணம் எடுத்துக்
கொடுக்கிறேன்''
( இரு சிநேகித - சிநேகிதிகளுக்கும் காதலன், காதலி வேறு இருக் கிறார்கள். நம் சின்னத்திரை எதை வற்புறுத்துகிறது? நீ வேறு ஒருவனைக் காதலிக்கிறாய் - பிரிவோம் என்று )
மற்றொரு அந்நியோன்யக் கவிதையைப் படியுங்கள். (அழகிய படத்துடன் படிக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். யுவன் - யுவதி, முதியோர் யாராயிருந்தாலும் ரூ.70/- செலவு செய்து விஜயா பதிப்பகம், கோயம்புத்தூரிலிருந்து பரிசளிக்க  வாங்கிக் கொடுங்கள் - நீங்களும் ஒரு முறை படித்துவிட்டுத்தான்!)
அந்தப் பூங்காவிற்குள்
அத்தனை மனிதர்கள்
அமர்ந்திருந்தபோதும்
நட்போடு நம்மால்
விளையாடிக்கொண்டிருக்க முடிகிறது
(எங்கே - பாரிஸ் அல்லது ரோம் நகர வீதியிலா.. இல்லை இல்லை)
நீ ஒரு புறாவாகவும்
நான் ஒரு அணிலாகவும்!
நிறையக் கவிதைகள் சுவைக்க இருக்கின்றன. ஒரே ஒரு கவிதையைச் சொல்லிவிட்டு -
அந்த மழைநாளில்
ஆளுக்கொரு குடை பிடித்தபடி
நடந்துகொண்டிருந்தோம்
வீசிய காற்றுக்கு காணாமல்போனது குடை
கேலியாய் சிரித்தபடி
உன் குடையையும் காற்றுக்குக் கொடுத்தபடி
கைகளை நீட்டினாய்
இருவரும் நடக்கத்துவங்கினோம்
நட்பின் குடைக்குள்
இந்தச் சித்திரக் காப்பியத்திற்கு, ஆர்.சி.மதிராஜ் ஒரு சிறப்பான அறிமுக உரை அளித்துள்ளார்.
``கடற்கரையின் அடுத்தடுத்த அலைகளை, கடிகாரத்தின் முட்களை, ஒரு பறவையின் இரண்டு சிறகுகளை, ஒரு நதியை வழிநடத்தும் இரண்டு கரைகளை, ஒரு மரத்தைப் பின்னிக் கிடக்கும் மற்றொரு தாவரத்தை நட்பின் கண்கொண்டு இரசித்தால் நீள நீள நீண்டுகொண்டே போகும் நட்பின் காட்சிகள்.
ஆண் பெண் பாகுபாடற்ற நட்பு ஓர் உயிரியல் அற்புதம். அதை உணர்ந்தவர்களால் மட்டுமே அடையவும் முடியும். காமம் சுமக்கும் உடல்களைத் தூக்கி எறிந்துவிட்டு, நட்பின் சிறகுகளால் ஆணும் பெண்ணும் அழகான வானவில்லை வரைகிற மழையின் சங்கீதமே இந்தக் கவிதைகள்.''
முடிவில் எனக்குச் சிலிர்ப்பு ஏற்பட்டது. 130ஆவது பாரதி பிறந்தநாள் டிசம்பர் 11. பாரதியின் முத்தாய்ப்பான வரிகளுடன்...
இவ்வுலகம் இனியது!
ஆண் நன்று; பெண் இனிது!
உடல் நன்று; புலன்கள் மிகவும் இனியவை!
எல்லா உயிரும் இன்பம் எய்துக!
எல்லா உடலும் நோய் தீர்க!
எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க!


- டிசம்பர் 2011 இதழ்  இலக்கிய பீடத்தில் வந்த விமர்சனம்

Wednesday, November 2, 2011

கொஞ்சம் காதல் கவிதைகள்



















உன்னைப் பற்றியே
நினைத்துக்கொண்டிருக்க
உன்னையே
பார்த்துக்கொண்டிருக்க
உன்னுடனேயே
பேசிக்கொண்டிருக்க

போதும்
இந்த இரவும்
ஒரு நிலவும்
சில மழைத்துளிகளும்
*

நீண்ட வாக்கியத்தில்
ஒரு சொல்லில்
ஒவ்வோர் எழுத்திலும்
பிரதிபலிக்கிறது
உனது சாயல்

சாயல்களற்ற
உன்னை
ஒரேயொரு முறை
எழுத முடிந்தால்போதும்
வேறெதுவும் தேவையில்லை
இந்தக் கவிதைக்கு
*

உன்னோடு
பேசவியலா
தருணங்களில்தான்
கவிதைகள்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
*

உன்னைப்
பார்க்கும்போதெல்லாம்
ஒரு பறவையாகிறேன்

நீ என்னைப்
பார்க்கும்போதோ
என் சிறகசைவை
நிறுத்திவிட்டு
உன் அந்தரத்தில்
மிதக்கிறேன்
*

Sunday, December 19, 2010

விகடன் கவிதை































பாசத் தீ
---------------------------------------
ஊருக்குச் சென்று
திரும்பும்போதெல்லாம்
சொல்லுவார் அப்பா
'உடம்பைப் பார்த்துக்கப்பா.’
என்று

எனக்கும் ஆசைதான்
சேர்ந்தாற்போல்
நான்கு நாட்கள் விடுமுறையில்
அருகிலேயே இருந்து
அப்பாவைக் கவனித்துக்கொள்ள
என்றாலும்
ஒருபோதும் முடிந்ததில்லை

ஒவ்வோர் இரவிலும்
கட்டிப்பிடித்தபடி
தூக்கத்தில்
மேலே போடும்
மகனின் கால் பிடித்து
அமுக்கிவிடுவேன் இதமாக
அப்பாவை எண்ணிக்கொண்டு!
---------------------------------------------
- ஆர்.சி.மதிராஜ்
--------------------------------------------------
நன்றி : ஆனந்த விகடன் 22.12.2010

Sunday, December 12, 2010

கவனிக்கத் தவறிய அப்பா
















கவனிக்கத் தவறிய அப்பா
---------------------------------------------------------
தாத்தா சொத்தென்று எதுவும் இல்லை
அப்பாவின் எழுபது வருட உழைப்புதான்
உருவாகி இருக்கிறது
வீடுகளாகவும் விளை நிலங்களாகவும்.

ஆறு பிள்ளைகளுக்கும்
ஆனது திருமணம்
ஏதும் பிரச்னையே இல்லை.

ஒரு சுபயோக சுபதினத்தில்
பைசா பாக்கி இல்லாமல்
பிரித்துக்கொண்டாயிற்று
சொத்துக்களையும்.

கடைசியாகத்தான் பேசிக்கொண்டோம்
அப்பா, அம்மா எங்கே இருப்பாங்க
யார் எவ்வளவு தரணும் என்று.

அப்பாவின் கண்கள்
கலங்கியதா என்றெல்லாம்
நான்
பார்க்கவில்லை!

- ஆர்.சி.மதிராஜ்
-----------------------------------------------------
நன்றி : ஆனந்த விகடன் (15 -12 -2010)

Saturday, October 9, 2010

தபூசங்கர் முன்னுரை






பாருங்கள் திறக்கப்படும்...

காதல் கவிதைகளில் காதல் இருந்தால் போதும். கவிதை இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் மதியின் காதல் கவிதைகளில் காதலும் இருக்கிறது; கவிதையும் இருக்கிறது.

`அப்படிப் பார்க்காதே' என்பது தலைப்பு. அப்படிப் பார்த்தால்தான் காதல். அப்படிப் பார்த்தால்தான் கவிதை. அப்படிப் பார்ப்பதும் பார்க்கப்படுவதும்தான் அவனுக்கும் அவளுக்கும் பிடிக்கும். ஆனாலும் அவனும் அவளும் அவ்வப் போது சொல்லிக் கொள்வதுண்டு... `அப்படிப் பார்க்காதே' என்று. அவர்கள் மொழியில் அதற்கு அர்த்தம் `அப்படிப் பார்' என்பதே.

அப்படிப் பார்க்கிறபோதுதான் பார்க்கிற கண்கள், மகிழ்ச்சி அடைகின்றன. அப்படிப் பார்க்கப்படுகிறபோதுதான் பார்க்கப்படுகிற கண்களும் மகிழ்ச்சி அடைகின்றன.

பார்ப்பதற்காகப் படைக்கப்பட்டவைதாம் கண்கள் என்றாலும், எல்லாக் கண்களும் ஏங்குவது நம்மை யாராவது பார்க்கமாட்டார்களா என்றே. அப்படிப் பார்ப்பவர்களை அது மறப்பதே இல்லை. விழிகளுக்கும் இமைகளுக்கும் நடுவே எங்கோ அவர்களின் உருவத்தை ஒட்டி வைத்துக்கொள்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இமைகளை மூடி, அவர்களைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டுக் கொள்கிறது. பார்க்கிற சக்தியை இழந்த பிறகும் அவர்களைப் பார்த்துக் கொள்கிற சக்தி மட்டும் அவற்றுக்கு இருக்கும்.

உருகி உருகி அழைத்தால்தான் ஏன் என்று கடவுள் கேட்பான் என்கிறார்கள். ஆனால் பார்த்தாலே ஏன் என்று கேட்கும் காதல். ஆம்... கடவுளின் கதவுகளைத் தட்டத்தான் கைகள் வேண்டும். காதலின் கதவுகளைத் தட்ட கண்களே போதும்.
இந்தக் கவிதைகளை உங்கள் கண்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது... இந்தக் கவிதைகளில் இருந்து ஒரு ஜோடி கண்கள், உங்கள் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் அப்படி.  அது காதலின் கண்கள்.

எனது கவிதை நூல்களுக்கு வடிவமைப்பை அழகாய் செய்பவர் இந்த மதி. இப்போது இவரே கவிதையும் எழுதியிருக்கிறார் அதே அழகோடு.

இந்த நூலிலிருந்து ஒன்றிரண்டு கவிதைகளை மட்டும் பிரித்தெடுத்து நான் உதாரணம் காட்டினால் மற்ற கவிதைகள் என்னைக் கோபித்துக் கொள்ளும். கவிதைகளின் கோபத்தை எதிர் கொள்ள என்னால் முடியாது. வாழ்த்துக்கள்!

அன்புடன்
தபூ சங்கர்
 ---------------------------------------------------
அப்படிப் பார்க்காதே...
காதல் கவிதைத் தொகுப்பிற்கு
அளித்த முன்னுரையிலிருந்து...
 ---------------------------------------------------

நக்கீரன் வெளியீடு
105 ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 2848 2424
விலை : ரூ.80/- 

அப்படிப் பார்க்காதே...

முதல் கவிதைத் தொகுப்பிலிருந்து...

முத்தம் தருவதாகச் சொல்லி
பேசிப் பிரிந்த அவசரத்தில்
உதடு சுழித்து
ஏமாற்றிச் சென்றாய்

நீ தராது சென்ற முத்தத்தை விட
அதிகம் சுவைத்தது
நீ சுழித்த உதடு
---------------------------------------------------

ன் கூந்தலிலிருந்து
வாடிய பூக்களைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்
 ---------------------------------------------------

ன் முத்தம் கொடுத்தோம்
என்றாகிவிட்டது

இப்போது
எவருடனும் பேசப்
பிரியப்படவில்லை
இதழ்கள்

 ---------------------------------------------------


த்தனை
கோபமென்றாலும்
ஒரு முழம் மல்லிகைக்கே
மயங்கிவிடுகிறாய்
நீ
நானும்

 ---------------------------------------------------

டற்கரையில்
தன் தலையில் தானே
மண்ணள்ளிப் போட்டு
விளையாடும்
குழந்தையையும் என்னையும்
மாறி மாறிப் பார்க்காதே

 ---------------------------------------------------

ன் அம்மாவின்
அதட்டலுக்குப் பயந்து
அவசரமாய்
சன்னலிலிருந்து
விலகிப் போனாய்

நான்
பார்த்து ரசிப்பதற்காக
உன்னை
அங்கேயே விட்டுவிட்டு

 ---------------------------------------------------

சொல்லித் தெரிவதில்லை காதல்
ஐலவ்யூ என்று
உன்னிடம் உளறுவதில்
உடன்பாடில்லை எனக்கு
நான் உன்னைக் காதலிப்பதை
உணரவேண்டும் நீயாய்
பிறகு
சொல்லிக்கொள்ளாமலேயே
காதலிப்போம் இருவரும்

 ---------------------------------------------------

வ்வொரு நாளின்
நிலவிலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நாம் இருவரும் சேர்ந்து
முதன் முதலாய் பார்த்த
அந்த முழு நிலவை

 ---------------------------------------------------

ன் குழந்தைக்கு
உன் பெயரை வைப்பதில்
விருப்பமில்லை எனக்கு

என்றேனும்
குழந்தையை
அதட்ட நேரிடலாம்

 ---------------------------------------------------

நினைவேட்டில்
எழுதும்போது
அழுதிருக்கவேண்டாம்
நீ

அழிந்த கையெழுத்து
சொல்லிக் கொண்டிருக்கிறது
நீ சொல்லாத
காதலை


 ---------------------------------------------------

நக்கீரன் வெளியீடு
105 ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 2848 2424


விலை : ரூ.80/- 

Friday, October 8, 2010

உலகளாவிய காதல் திரைப்படங்கள்

உலகளவிய
காதல் திரைப்படங்களில்
மிச்சிறந்த அவசியம் பார்க்கவேண்டிய
படங்களின் பட்டியல்

1. The Notebook
2. Titanic (1997)
3. 10 Things I Hate About You (1999)
4. Bicentennial Man (1999)
5. Dirty Dancing (1987)
6. Gone With the Wind (1941)
7. An Affair to Remember (1957)
8. Amelie (2001)
9. Pretty Woman (1990)
10. Runaway Bride (1999)
11. Roman Holiday (1953)
12. Casablanca (1943)
13. City of Angels (1998)
14. When Harry Met Sally (1989)
15. Edward Scissorhands (1990)
16. Father of the Bride (1991)
17. Mrs. Doubtfire (1993)
18. My Fair Lady (1964)
19. My Best Friend's Wedding (1997)
20. Message in a Bottle (1999)
21. Modern Times (1936)
22. It Happened One Night (1934)
23. I Am Sam (2001)
24. Maid in Manhattan (2002)
25. Dying Young (1991)
26. Romancing the Stone (1984)
27. Sleeping With the Enemy (1991)
28. French Kiss (1995)
29. You’ve Got Mail (1998)
30. Sabrina (1995)
31. Ghost (1990)
32. A Walk To Remember (2002)
33. It's a Wonderful Life (1947)
34. Miracle on 34th Street (1947)
35. The Proposal (2009)
36. Sweet November (2001)
37. While You Were Sleeping (1995)
38. Forever Young (1992)
39. Pearl Harbor (2001)
40. Hannah Montana The Movie (2009)
41. Forrest Gump (1994)
42. The Reader (2008)
43. Summer of '42 (1971)
44. Lilya 4-ever (2002)
45. The Clock (1945)
46. The Piano (1993)
47. Big (1988)
48. Every Time We Say Goodbye (1986)
49. The Seven Year Itch (1955)
50. Bus Stop (1956)

Thursday, October 7, 2010

குட்டி இளவரசி கவிதை புத்தகத்துக்கு அண்ணன் அறிவுமதி எழுதிய முன்னுரை...

















காலம் நீள்கிறது என்றாலும்...
வாழ்வு நீள்கிறது என்றாலும்...
காதல் நீள்கிறது என்றுதான் பொருள்.
உலகம் வாழ்கிறது என்றாலும்
உயிர் வாழ்கிறது என்றாலும்
காதல் வாழ்கிறது என்றுதான் பொருள்.


காதல் நீளும். காதலே நீட்டும்.
காதல் வாழும். காதலே வாழ்விக்கும்.
காதல் வாழ்வும் தமிழ் வாழ்வும்
சந்திக்கும் இடம்
இயற்கை.
இயற்கையே காதலும்.
பாரதிச் சொல்லில்...
காதல் இயற்கை.
மகரந்தச் சேர்க்கைதான் காதல்
சேர்க்கையும்.
பூக்களைச் சுற்றிய வண்டுகளின்
ஒலிச் சிந்தல்கள்தாம்
காதல் கவிதைகள்.
வழுக்குப் பாறைகளில் ஏறி... சறுக்கி
விளையாடிய குழந்தைகளின்
காலம்
சங்க காலம்.
பூங்காக்களின் தகரப் பலகைகளில் ஏறி... சறுக்கி
விளையாடுகிற குழந்தைகளின்
காலம்
தற்காலம்.


காலங்கள் மாறலாம்.
சறுக்கி விளையாடுதல் மாறாது.
காதல் கவிதைகளும்தாம்.
எழுதி மாளாது.
எழுதி எழுதி மாளாது.
புன்செய்க் காடுகளில், கம்மாக் கரைகளில்...
கருவேலங் காடுகளில்
கரட்டு மேடுகளில்... என
எழுதிப் பழகாத கைநாட்டுக் காலத்துத்
தெம்மாங்குகள்தாம்...
ஆண்டாள்களின் பக்திக் காதலாகி...
அய்யாவின் மிரட்டலுக்குப் பயந்து தெளிந்து
படிப்புத் தமிழ் இளைஞர்களின்
காதல் கவிதைகளாய்ப் பெருகிக் கொண்டிருக்கின்றன.


பாலசூர்யா, லலிதா, அண்ணன் அறிவுமதி, புகழேந்தியுடன்...
ஊர்மண் உயிர்ப்புகளை உள்வாங்கிக் கொண்டு
ஊரிலிருந்து புறப்பட்டு வந்த வாழ்வை
நகர நடுவிலும் நசுங்கிவிடாமல் பாதுகாக்கும்
தம்பி மதியின் படைப்பு வளர்ச்சி எனக்குள்
மகிழ்ச்சி செய்கிறது.
 

‘பூங்கா மரத்தடியில்
உதிர்ந்து விழுந்த
இலைகளின் மீது
பதித்துச் செல்லாதீர்கள்
பாதச் சுவடுகளை
சருகுகளினூடே
தேடிக் கொண்டிருக்கலாம்
பழைய காதலொன்று
தொலைந்து போன
தன் பச்சையத்தை’

இயல்பாக... ஆனால்
எம் புன்செய் ஈரத்தின் நெகிழ்வாகக் கிடைத்துள்ள கவிதையிது.
 

‘உதடுகளின் வரிகளை
எண்ணத் துவங்கினேன்’

ஒரு கைதேர்ந்த நிழற்படக்காரனின்
குவி கண்ணாடியால் மிக அருகில் சென்று
உற்றுநோக்குதல் தன்மை
கவிதைக்குள் நிகழ்கிறது.
 

‘பேருந்தில்
நின்றபடி செல்லும்போது
தொங்கும்
கைப்பிடிகளில் ஒன்றைப்
பிடிமானமாய்ப் பற்ற நேர்கையில்
உனது கையாகவே
உணர்கிறேன்’

மிக மிக அழகிய கவிதையிது.
அடிக்கடி அனைவரும் பயன்படுத்துகிற ஒரு பொருளை
கவிதைப் பொருளாக்கிக் காதல் செய்வதில் சுவைஞனை சொடுக்கி இழுப்பது சுலபம்.
இந்தக் கவிதைக்கு அது வாய்த்திருக்கிறது.

‘நீ வீதியில் இறங்கியபோது
சாரலாகத்தான் தொடங்கியது
மழை
குடை விரித்த
கோபத்தில்தான்
கொட்டித் தீர்த்துவிட்டது’


மழைக்கோபம் நியாயமானதுதானே!
மழை... கோபக்காரி.
மழையை மழையாய்
வாங்கத் தெரியாதவர்களிடம்
அவள் முரண்படுவாள். மோதுவாள்.
காதலைக் காதலாய்
வாங்கத் தெரிந்தவர்களுக்குக்
காதல்...
தேவதைக்காரி.
அதனால்தான்
தம்பி மதிக்கு
அவள் உடன்பட்டிருக்கிறாள்.
உயிர் தளும்பும் காதல்கவிதைகளை
ஊற்றி ஊற்றித் தருகிறாள்.
‘மதி’ காதல் கவிதைக்காரர்களில்
இன்றியமையாத இடத்தை
உறுதியாகப் பெறுவார்.


 ............................................................................
 நூல் கிடைக்குமிடம்
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.80/- 

பழநிபாரதி முன்னுரை


எனது காதலோடு விளையாடி கவிதை நூலுக்கு அண்ணன் பழநிபாரதி அளித்த முன்னுரை...



பொம்மைகளுக்கு உயிர்கொடுக்கிறது விளையாட்டு. ஊட்டிவிட்டு, உடைமாற்றி, முத்தமிட்டு மடியில் சாய்த்து, தட்டிக்கொடுத்துத் தூங்கவைக்கின்றன குழந்தைகள். ஆனாலும் தூங்குவதில்லை பொம்மைகள். பிறகு ஒன்றையொன்று தழுவிக்கொண்டு ஒரே நேரத்தில் உறங்கிவிடுகின்றன. அது அலுப்போ சலிப்போ அல்ல; விளையாட்டின் உச்சம். அந்த உறக்கத்திற்காகத்தான் அத்தனை விழிப்பு. அது உறக்கமல்ல; தியானம்.

வெண்டைக்காய்க் காம்பில் பொட்டு, வேர்க்கடலைத் தோடுகள், தென்னங்கீற்றில் மோதிரங்கள், பூவரசு இலையில் நாத
சுவரம், மாலை மாற்றும் மரப்பாச்சிகள், ஆவி பறக்கும் மண் இட்டிலிகள்...

விருந்தோம்பலுக்குப் பிறகு தட்டுகளைக் கழுவிக் கழுவிக் காக்கைகளுக்கு ஊற்றும் கரிசனங்கள்.

இயற்கையோடு இயைந்த இந்த இளம் விளையாட்டில் எத்தனை அழகான மெய்ப்பாடுகள்?

இந்தச் சிறு விளையாட்டின் திருவிளையாடல்தான் காதல். தீராத விளையாட்டுப் பிள்ளைகள் காதலர்கள்.

உன்
உள்ளங்கையில்
உருட்டி
விளையாடுவதற்கென்றால்
சொல் தருகிறேன்
ஒரு கண்ணீர்த்துளியை

என்கிறான் மதி.

கண்ணீரை எல்லோருடைய கைகளிலும் விளையாடத் தந்துவிட முடியாது. கண்ணீரைக் கைகளால் அல்ல; கண்களால் வாங்குகிற காதல் வேண்டும். அந்தக் கண்ணீரில் தன் முகத்தைப் பார்க்கிற கண்கள் வேண்டும். அதன் வெதுவெதுப்பையும் ஈரத்தையும் உப்பையும் உயிர்வரை நினைந்துருகும் உள்ளம் வேண்டும்.

பனித்துளி ஒன்று மல்லிகையிடம் கேட்டது
என்னை உன் இதயத்தில்
என்றென்றும் வைத்திருப்பாயா
மல்லிகை-
ஐயோ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே
மண்ணில் உதிர்ந்து விழுந்துவிட்டது

தாகூரின் பனித்துளியின் ஈரத்தை, தம்பி மதியின் கண்ணீர்த்துளியில் நான் காண்கிறேன். இது ஒப்பீடு அல்ல; அவர் ஏற்றித் தந்த விளக்கை இவன் ஏந்திக் கொண்டிருப்பது.

படிக்கட்டுப் பயணத்தில்
யாராலோ தவறவிடப்பட்டு
தனிமையில்
தெருவோரம் கிடக்கும்
இந்த ஒற்றைக் காலணிக்கும்
இருக்கும்தானே
காதலின் வலி

என்று உயிர்வலி உணர்ந்தவனாக மதி இருக்கிறான். கை தவறி விழுந்து உடைந்த பொம்மைக்காகத் தேம்பும் எதிர்வீட்டுக் குழந்தையைச் சமாதானம் செய்து, ஆறுதல் அளிப்பவளாக அவனது காதலி இருக்கிறாள். இதுதான் காதல்; இவர்கள்தாம் காதலர்கள்.

எல்லா உயிர்களுக்காகவும் துடிக்கிற ஓர் இதயத்தில்தான் உண்மையான காதல் உருவாக முடியும். அந்தப் பிரியங்களின் கண்ணிகளில்தாம் உயிர்ச்சங்கிலி பின்னப்பட்டிருக்கிறது. யாரால் பிரிக்க முடியும்? யாரால் பிரிய முடியும்?

நீ
எவ்வளவு
அழகானவள் என்று
நீயே பார்த்துக்கொள்ள
படைக்கப்பட்டவைதாம்
என் கண்கள்

நான் சந்தித்த பெண்களிலேயே அவளுக்குத்தான் கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இதயம் இருந்தது என்று எழுதினான் கண்ணதாசன். காதல் கசியும் கண்களுக்குத்தாம் அப்படிப்பட்ட நுட்பமான அகத்தின் தரிசனம் கிட்டும்.


மௌனங்கள் போர்த்திய விழிகளில், உருண்டு வரும் கண்ணீர்த்துளி மறைத்து, உடல் நடுங்கி, உதடு கடித்து அவள் நின்றபோதுதான் மதி, தன் காதலின் முழுமையை அடைந்திருக்கிறான்.

முழுமையான காதல் அழிவதில்லை. அது ஆதிக் கடலின் அடியில் முத்துச்சிப்பிக்குள் படுத்திருக்கும். பறவைகளின் கூட்டில் வசித்திருக்கும். பகலெல்லாம் பூக்களோடு; இரவெல்லாம் நட்சத்திரங்களோடு விளையாடிக்கொண்டே இருக்கும்.

காதலாக மலர்ந்திருக்கும் மதிக்கு அன்பில் நனைந்த எனது வாழ்த்துகளை அள்ளித் தருகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பழநிபாரதி
 ............................................................................
 நூல் கிடைக்குமிடம்
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.40/-