Thursday, October 7, 2010

பழநிபாரதி முன்னுரை


எனது காதலோடு விளையாடி கவிதை நூலுக்கு அண்ணன் பழநிபாரதி அளித்த முன்னுரை...



பொம்மைகளுக்கு உயிர்கொடுக்கிறது விளையாட்டு. ஊட்டிவிட்டு, உடைமாற்றி, முத்தமிட்டு மடியில் சாய்த்து, தட்டிக்கொடுத்துத் தூங்கவைக்கின்றன குழந்தைகள். ஆனாலும் தூங்குவதில்லை பொம்மைகள். பிறகு ஒன்றையொன்று தழுவிக்கொண்டு ஒரே நேரத்தில் உறங்கிவிடுகின்றன. அது அலுப்போ சலிப்போ அல்ல; விளையாட்டின் உச்சம். அந்த உறக்கத்திற்காகத்தான் அத்தனை விழிப்பு. அது உறக்கமல்ல; தியானம்.

வெண்டைக்காய்க் காம்பில் பொட்டு, வேர்க்கடலைத் தோடுகள், தென்னங்கீற்றில் மோதிரங்கள், பூவரசு இலையில் நாத
சுவரம், மாலை மாற்றும் மரப்பாச்சிகள், ஆவி பறக்கும் மண் இட்டிலிகள்...

விருந்தோம்பலுக்குப் பிறகு தட்டுகளைக் கழுவிக் கழுவிக் காக்கைகளுக்கு ஊற்றும் கரிசனங்கள்.

இயற்கையோடு இயைந்த இந்த இளம் விளையாட்டில் எத்தனை அழகான மெய்ப்பாடுகள்?

இந்தச் சிறு விளையாட்டின் திருவிளையாடல்தான் காதல். தீராத விளையாட்டுப் பிள்ளைகள் காதலர்கள்.

உன்
உள்ளங்கையில்
உருட்டி
விளையாடுவதற்கென்றால்
சொல் தருகிறேன்
ஒரு கண்ணீர்த்துளியை

என்கிறான் மதி.

கண்ணீரை எல்லோருடைய கைகளிலும் விளையாடத் தந்துவிட முடியாது. கண்ணீரைக் கைகளால் அல்ல; கண்களால் வாங்குகிற காதல் வேண்டும். அந்தக் கண்ணீரில் தன் முகத்தைப் பார்க்கிற கண்கள் வேண்டும். அதன் வெதுவெதுப்பையும் ஈரத்தையும் உப்பையும் உயிர்வரை நினைந்துருகும் உள்ளம் வேண்டும்.

பனித்துளி ஒன்று மல்லிகையிடம் கேட்டது
என்னை உன் இதயத்தில்
என்றென்றும் வைத்திருப்பாயா
மல்லிகை-
ஐயோ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே
மண்ணில் உதிர்ந்து விழுந்துவிட்டது

தாகூரின் பனித்துளியின் ஈரத்தை, தம்பி மதியின் கண்ணீர்த்துளியில் நான் காண்கிறேன். இது ஒப்பீடு அல்ல; அவர் ஏற்றித் தந்த விளக்கை இவன் ஏந்திக் கொண்டிருப்பது.

படிக்கட்டுப் பயணத்தில்
யாராலோ தவறவிடப்பட்டு
தனிமையில்
தெருவோரம் கிடக்கும்
இந்த ஒற்றைக் காலணிக்கும்
இருக்கும்தானே
காதலின் வலி

என்று உயிர்வலி உணர்ந்தவனாக மதி இருக்கிறான். கை தவறி விழுந்து உடைந்த பொம்மைக்காகத் தேம்பும் எதிர்வீட்டுக் குழந்தையைச் சமாதானம் செய்து, ஆறுதல் அளிப்பவளாக அவனது காதலி இருக்கிறாள். இதுதான் காதல்; இவர்கள்தாம் காதலர்கள்.

எல்லா உயிர்களுக்காகவும் துடிக்கிற ஓர் இதயத்தில்தான் உண்மையான காதல் உருவாக முடியும். அந்தப் பிரியங்களின் கண்ணிகளில்தாம் உயிர்ச்சங்கிலி பின்னப்பட்டிருக்கிறது. யாரால் பிரிக்க முடியும்? யாரால் பிரிய முடியும்?

நீ
எவ்வளவு
அழகானவள் என்று
நீயே பார்த்துக்கொள்ள
படைக்கப்பட்டவைதாம்
என் கண்கள்

நான் சந்தித்த பெண்களிலேயே அவளுக்குத்தான் கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இதயம் இருந்தது என்று எழுதினான் கண்ணதாசன். காதல் கசியும் கண்களுக்குத்தாம் அப்படிப்பட்ட நுட்பமான அகத்தின் தரிசனம் கிட்டும்.


மௌனங்கள் போர்த்திய விழிகளில், உருண்டு வரும் கண்ணீர்த்துளி மறைத்து, உடல் நடுங்கி, உதடு கடித்து அவள் நின்றபோதுதான் மதி, தன் காதலின் முழுமையை அடைந்திருக்கிறான்.

முழுமையான காதல் அழிவதில்லை. அது ஆதிக் கடலின் அடியில் முத்துச்சிப்பிக்குள் படுத்திருக்கும். பறவைகளின் கூட்டில் வசித்திருக்கும். பகலெல்லாம் பூக்களோடு; இரவெல்லாம் நட்சத்திரங்களோடு விளையாடிக்கொண்டே இருக்கும்.

காதலாக மலர்ந்திருக்கும் மதிக்கு அன்பில் நனைந்த எனது வாழ்த்துகளை அள்ளித் தருகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பழநிபாரதி
 ............................................................................
 நூல் கிடைக்குமிடம்
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.40/- 

No comments:

Post a Comment